போலிகள்
காலை முதல் போலிகள்
கண்ணில் படும்
பற்பசையில் லவங்கம்
என்றான்
வாசமில்லா வெறும்
சரக்கு
பால்பாக்கெட்டில்
இருப்பது
பால்தானா சந்தேகம்
ஆர்கானிக் காய்கறி
என்றான்
அதிலும் ஏதோநெடி
பேருந்து நிறுத்தத்தில்
பவுடர் பூசிய முகங்கள்
குதூகலமில்லா மாணவர்கள்
இளமை தொலைத்த முதுகு
பாரம்
இளைஞர் முதுகில்
கறுப்புப் பை
நிதானம் இல்லாத
பைக்குகள்
வங்கி நோட்டில்
கையெழுத்து
மெஷினில் வந்தது
என்றால்
வெற்றுச் சிரிப்பு
கை நீட்டல்
தொல்லைகாட்சி அணைந்திருந்தால்
கறுப்பு
ஒளிர்ந்தால் அத்தனையும்
பொய் சரடு
மதியம் சாப்பிட
பயம்
நோய்தானா நமக்கென
ஐயம்
மருத்துவன் விரல்
நீளும்
சாயங்காலம் பறவைக்
கூச்சல்
அது மட்டும் நிஜ
உலகம்
இரவு தூங்குவதும்
மாத்திரை மயக்கம்
எங்கே உண்மையென
கனவில் தேடுகிறேன்
கிடைத்த பாடில்லை…
No comments:
Post a Comment