Monday, May 18, 2020

நானே நானா, யாரோ தானா!!


நானே நானா, யாரோ தானா!!
1.முன்னுரை
பிரலமானவர்கள்தான் சுயசரிதைப் பாணியில் எழுத வேண்டுமா? என்னைப் போன்ற தேய்ந்துபோன (?) எழுத்தாளர்கள் வாழ்வில் சில சுவையான சம்பவங்கள் இருக்கக் கூடாதா என்ன? அட என்ன எழுத்தாளன்? நான் சாதாரணன்தான்..அதனால் இந்தத் தொடர். பிடித்தால் படியுங்கள். அல்லது கடந்துவிட்டுப் போங்கள். நான் என்ன பத்திரிகை அல்லது மீடியாவா நடத்துகிறேன், டிஆர்பி வேண்டும் எனக் கவலைப்பட?

முகநூல், என்னுடைய இணைய தளம் ஆகியவற்றில் நான் கிறுக்கப் போகிறேன். பிரபலமாயிருந்தால் பணம் கட்டி இணையம் வைத்துக்கொள்ளலாம். நான் ஒரு பென்ஷனர். என் தகுதிக்கு இலவச தளம்தான். நான் ஹைடெக் ஆனவன் இல்லை. MS word typing தெரியும் அவ்வளவுதான். என் போஸ்ட் வளவள என்று நீளமாய் இருக்காது. ஏனெனில் யாராவது நீண்ட போஸ்ட் முகநூலில் போட்டாலே எனக்கே படிக்க பொறுமை இருக்காது. சிறிது சிறிதாகத்தான் இருக்கும். கவலை வேண்டாம். .உங்கள் விரலை ஸ்வைப் பண்ணவிடமாட்டேன். 

ஆனால் ரோலர் கோஸ்டராக இருக்கும் அதன் காலகட்டம். அதாவது இன்று சிறு வயது பற்றி எழுதினால், அடுத்த அத்தியாயம் திடீரென்று நேற்று நடந்தது பற்றி இருக்கும் என்று இப்போதே பயமுறுத்திவிடுகிறேன்.
சில சமயம் நான் காயப்படுத்தியிருப்பேன். என்னையும் சிலர் காயப்படுத்தியிருப்பார்கள்.
எனக்கு எது நினைவுக்கு வருகிறதோ அது இனி எழுத்தாய் மாறிவிடும்.
படிப்பது உங்கள் விதி. 

சிலர் ராத்திரி 12 மணி வரை முழித்து எழுதுகிறார்கள். ஆனால் நான் இரவு 9 மணிக்கு மாத்திரை மயக்கத்தில் படுத்தால், காலை 6 மணிக்கு எழுகிறேன். நடு ராத்திரி சில சமயம் மயக்கம் தெளிந்துவிடும். அதன்பின் எப்படியோ மீண்டும் தூக்கம் வந்துவிடும். இந்த 74 வயதில் ரொம்ப நேரம் டைப் அடிக்க முடியவில்லை.

(நாளை என் தலைமுடி பற்றி)—இப்படிதான் தொடரும் போடுவேன்



No comments:

Post a Comment

Featured Post

என் சிறுகதை. ஜனவரி 1968 கலைமகள் பத்திரிகையில் வெளியானது

  அவரும் அவளும்                    கையில் ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு ஜங்க்‌ஷனுக்குக் கிளம்பினார் மாதவன். வழுக்கை விழுந்திருந்த அவருட...