Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Tuesday, May 19, 2020

நானே நானா, யாரோ தானா!!


நானே நானா, யாரோ தானா!!

3. அது ஒரு மாதிரி பள்ளி

காலஞ்சென்ற முதல்வர் கர்மவீர்ர் காமராஜர் 1960 களில் பட்டி தொட்டி எங்கும் உயர்நிலைப்பள்ளிகளைத் தோற்றுவித்தார். ஆனால் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் வெறும் பட்டம் பெற்ற என்னைப் போன்றவர்கள் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் ஆயினர். நானும் மூன்று ஆண்டுகள் அந்தப் பள்ளியில் பணிசெய்துவிட்டு, இதுதான் இனி நம் வாழ்க்கை என்று சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் BT படிக்கப்போனேன்.

நான் பணியாற்றிய அந்தப் பள்ளி ஒரு நொடோரியஸ் பள்ளி. யாராவது ஆசிரியர்களுக்குத் துறை சம்பந்தமான தண்டனை என்றால் அந்தப் பள்ளிக்கு மாற்றிவிடுவார்கள். என் நண்பர்கள் தொந்தரவு இல்லாத பள்ளிகளில் அமர்ந்துவிட்டார்கள். ஏனெனில் நான் பள்ளியில் பயிற்சி பெறா ஆசிரியராகச் சேரலாமா வேண்டாமா என்று மூன்று மாதம் வேஸ்ட் செய்துவிட்டு, வேலூர் முதன்மைக் கல்வி அதிகாரி முன் போய் நின்றேன்.

“இதோ பாரப்பா, இந்தப் பள்ளிதான் இருக்கு உன் ஊருக்கு கிட்ட. இது ஒரு மாதிரிப் பள்ளி. உன்னைப் பார்த்தால் பிராமணப் பிள்ளை மாதிரி தெரியுது. போட்டால் சமாளிப்பியா?’ என்றார் அதிகாரி. அது தி.க வினர் அதிகம் இருந்த ஊர். எங்கள் திருப்பத்தூரிலிருந்து 8 கிமீ தொலைவு.

‘சமாளிப்பேன், சார்.” என்றதும் கையோடு ஆர்டர் வாங்கினேன்.

பள்ளியில் சேர்ந்துவிட்டேன். நான் சேர்ந்த அன்று ஒரே கூட்டம். விசாரித்தால் பதினோராம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் இன்னொரு மாணவியைக் காதலித்து இருவரும் ஓடிப்போய்விட்டார்களாம். அவனை எச்சரிக்க மாணவியின் தரப்பு தடிகள் சகிதம் வந்திருக்கிறது.

அந்தப் பள்ளியில் 10 F வரை செக்‌ஷன்கள் உண்டு. அந்த 10 ம் வகுப்பில் ஃபெயிலான மாணவர்கள்தான் உண்டு. அதற்கு போகவே மூத்த ஆசிரியர்கள் பயப்படுவார்கள். அதனால் எங்களைப் போன்ற அன்டிரெயிண்ட் ஆசிய்ர்களை அனுப்பினார்கள்..நாங்கள் பத்து பேர் இருந்தோம். 

அதற்கு நான் விஞ்ஞான ஆசிரியராக டைம்டேபிள் கொடுத்தார்கள். வகுப்பில் நுழைந்தால் மாணவர்கள் எழுந்துகூட நிற்கவில்லை. ஒவ்வொருவரும் என்னைவிட தாட்டியாக இருந்தார்கள்.

நான் கண்டுகொள்ளாமல் ஒரு பாடத்தை நடத்திவிட்டு, “ஏதாவது சந்தேகம் இருக்கா?” என்றேன்.

“சார்!! உங்களுக்கு கல்யாணம் ஆயிடிச்சா?” என்றான் ஒருவன்.

நான் எதிர்பாராத கேள்வி. உடனே ஏதோ சொல்லி சமாளித்தேன்.

ஒரு மாணவனைக் காட்டி, “சார்! இவன் பேர் ஆறுமுகம். இவனுக்கு ரெண்டு மாசம் முன்னே கல்யாணம் ஆயிடுச்சி” என்றான் ஒருவன். வகுப்பு சிரித்தது. அந்த ஆறுமுகத்தை பள்ளி நிர்வாகம் மூன்றாம் முறையாக ஃபெயில் ஆக்கியிருந்தது. அவனுக்கு என் வயது. அதாவது 20.

அந்த வகுப்புக்குப் போன என் போன்ற அன்டிரெயிண்டு ஆசிரியர்கள் தீர்மானம் போட்டோம். இந்த வருஷம் எல்லாருக்கும் பாஸ் மார்க் போட்டுவிடுவது என்று. 25 வாங்கினால் பாஸ் என்று அவர்கள் எல்லோரையும் 11 ம் வகுப்பான SSLC க்கு மாற்றிவிட்டோம். தலைமை ஆசிரியர் கொஞ்சம் பயந்தார். ஏனெனில் பள்ளி ரிஸல்ட் 15 சதவீதம்தான் வரும். இவர்களால் இன்னும் குறையும்.

நாங்கள் சொன்னோம், “சார், இந்த வகுப்புக்குப் போக மூத்த ஆசிரியர்களே பயப்படுறாங்க. 11 முடிந்ததும் இவங்க பள்ளிக்கு வரமாட்டாங்க. அவங்க வகுப்பை நாங்களே நடத்துறோம்” என்றதும் தலைமை ஆசிரியர் ஒப்புக்கொண்டார்.

அந்த ஆறுமுகத்தை பல வருடம் கழித்து ரயில்வே ஜங்ஷனில் பார்த்தேன். ரயில்வே கூலியாக வேலை என்றான். 10 வது இருந்ததாலே வேலை கெடைச்சுது சார் என்றான்.

No comments:

Post a Comment