Friday, May 22, 2020

நானே நானா, யாரோ தானா!!


நானே நானா, யாரோ தானா!!

5. படிக்கும் குதூகலம்

எனக்கு அந்தச் செய்தி வியப்பளிக்கவில்லை. விகடன் குழுமம் ஆட்களைக் குறைத்திருக்கிறது. கவனியுங்கள்: “ஆட்கள்” என்று போட்டிருக்கிறேன். 

நான் 1967 முதல் பத்திரிகைகள் வாயிலாக எழுதி வருகிறேன். தினமணி கதிரில் பல கதைகளை ஆசிரியர் சாவி அவர்கள் வெளியிட்டார்.. 1968 ல் கலைமகள் பத்திரிகை என் சிறுகதையைப் பிரசுரித்தது.. நான் என் மூலக் கைப்பிரதியை ஒப்பு நோக்கிப் பார்த்தேன். சில இடங்களில் இலேசாகத் திருத்தியிருந்தார்கள். “சன்மானம்’ என்று எழுதியிருந்தேன். அது சம்மானம் ஆகியிருந்தது. செல்லப்பெண் என்பது செல்வப்பெண் ஆகியிருந்தது. சுவற்றில் . படம் மாட்டப்பட்டிருந்தது என்பது சுவரில் படம் மாட்டியிருந்தது என திருத்தப்பட்டது...

இப்படி கற்றுக்கொடுக்கும் பத்திரிகை ஆசிரியர்கள் இப்போது இல்லை. விஷுவல் எஜுகேஷன் என்று கம்ப்யூட்டர் முன்னால் டைப் அடித்தால் போதும். இடதுசாரித்தனம், இந்து மத வெறுப்பு என்ற தீக்குழிக்குள் இறங்கிய அவர்களை அந்தத் தீயே அழித்துவிட்டிருக்கிறது.

1956 முதல் விகடன் வாங்கினோம். வீட்டிலே படிக்க சண்டை நடக்கும். துப்பறியும் சாம்பு படிக்க எப்போதடா வெள்ளிக்கிழமை வரும் என்று நாட்களை எண்ணுவோம்.. 2008 ல் அந்தப் பத்திரிகை மேல் ஓர் ஒவ்வாமை ஏற்பட்டு வாங்குவதை நிறுத்திவிட்டேன். விகடன் தன் பரம்பரை வாசகர்களை இழந்துவிட்டது. ரேடியோவில் ரேடியோ அண்ணா மிகவும் பிரசித்தம். பாப்பா மலர் கேட்போம். கிரிக்கெட் ரன்னிங் காமெண்டரி கேட்போம்.. இப்படி வளர்ந்த கூட்டம் இப்போது முதுமையிலும் படிப்பதில் சுறுசுறுப்பாய் இருக்கிறோம். ஆனால் நல்ல பத்திரிகைகள் காணோம்.

2006 ல் அவள் விகடனில்  “ஈஸியா பேசலாம் இங்கிலீஷ்” என்று 32 இதழ்கள் தொடர் எழுதினேன். அவர்களே அதைப் புத்தகமாகப் போட்டார்கள். ஏனோ இடதுசாரி எழுத்தாளர்களின் அச்சுப் புத்தகங்களை மட்டும் பிரிண்டில் வைத்திருக்கிறார்கள். அதனால் நான் அதை கிழக்கு பதிப்பகம் மூலமாய் “நீங்களும் பேசலாம் இங்கிலீஷ்” என வெளியிட்டிருக்கிறேன்.

என் மூத்த மகள் தன் மகள்களுக்கு வண்ணமயமாய் புத்தகங்கள் வாங்கி அவர்களைப் படிக்கவைத்தாள். அவளே என்னைப் போல் ஒரு புத்தகப்புழு.. என் சிறிய பேத்தி தன் ஏழு வயதில் இருந்தே கிண்டில் வாசகி. அந்தக் கருவியில் 100 புத்தகங்கள் வைத்திருக்கிறாள். அவர்களைப் பார்த்து நானும் ஒரு கிண்டில் கருவி வாங்கிவிட்டேன்.

விடுமுறைக்கு சென்னை வந்தால் அவளுக்காகவே நான் கிண்டில் புத்தகம் வாங்கிக் கொடுக்கிறேன். இப்போது ஏழாவது படிக்கிறாள். ஓஹோ, இனி வரும் தலைமுறை இப்படித்தானோ என்று அந்த லாகவம் புரிந்துபோய் என் பழைய, புது கதை, கட்டுரைகளை Amazon KDP யில் மின்நூல் ஆக்கிவிட்டேன். என் ஆங்கில நாவல்கள் மின்நூலாகவும் கிடைக்கின்றன.. அமேஸான் தேடலில் என் பெயரை  ananthasairam என்று டைப்பினால் என் புத்தக லிஸ்ட் வந்துவிடும்.

இனி வரும் காலம் இணைய மின் நூல் காலம்.  இப்போது பிரபலமான தமிழ் எழுத்தாளர்களும் இதைப் புரிந்து அதன் பக்கம் சாய ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இன்றும் கூட ஆன்மீகப் பற்றுள்ளவர்கள்தான் படிக்கும் அந்தக் குதூகலத்தைப் பெற்றவர்கள். இணைய நிறுவனர்கள் அவர்களுக்கு எதிராய் எழுதினால் அடுத்த நிமிடமே அந்த இ பத்திரிகையைப் புறக்கணித்து விடுவார்கள். 

தினமலர் இணையத்தை 60% நம்பலாம். ஒன் இந்தியா தளத்தை இடதுசாரிகளே 30% தான் நம்புவார்கள். விகடன் இணையமும் அதே பாதையில் செல்வதுபோல் தெரிகிறது. இதை விகடன் புரிந்துகொள்ளாமல் போய்விட்ட அவலம் தொடர்கிறது. இனியாவது அது விழித்துக் கொள்ளுமா?

No comments:

Post a Comment

Featured Post

என் சிறுகதை. ஜனவரி 1968 கலைமகள் பத்திரிகையில் வெளியானது

  அவரும் அவளும்                    கையில் ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு ஜங்க்‌ஷனுக்குக் கிளம்பினார் மாதவன். வழுக்கை விழுந்திருந்த அவருட...