”சார்! இது முஸ்லீம் பள்ளி. உங்களுக்கு
ஏதும் தொந்தரவு இருக்காதே?” என்றார்.தலைமை ஆசிரியர்
’நோ ப்ராப்ளம்
சார்’ என்றேன்.
ஹையர்
செகண்டரி வகுப்பு முழுவதற்கும் நான்தான் ஆங்கில ஆசிரியர். தமிழ் மீடியம்,
இங்கிலீஷ் மீடியம்,உருது செக்ஷன் ஆகிய அனைத்துக்கும் போன ஒரே இந்து ஆசிரியர் நான். 1978ல் மேனிலைப்
பள்ளிகள் வந்தபோது ஏதோ குக்கிராமத்தில் இருந்த என்னை வேலூருக்கு ப்ரமோஷன் கொடுத்து
மாற்றினார்கள்.
நான் பள்ளியில்
சேர்ந்தபோது ஜாயினிங் ரிபோர்ட் தந்தேன். அதைப் படித்த தலைமை ஆசிரியர் என் இங்கிலீஷ் மேல்
பிரியம் கொண்டார். ஒரு முறை ஓர் ஆங்கிலக் கடிதத்திற்கு ஆங்கிலத்திலேயே பதில்
எழுதி என்னைக் கூப்பிட்டனுப்பினார் சரியா எனக் கேட்க. அவரும் எம்.ஏ ஹிஸ்டரிதான்.
நான் சில திருத்தங்களை செய்து கொடுத்தேன். Comprise of எனப் போட்டிருந்தார். நான்
அதற்கு of வராது என்றேன். விவாதிக்கத் தொடங்கினார். இங்கிலீஷில் ரைட் ராங் எதுவும்
கிடையாது, appropriate English, inappropriate English என்றுதான் உண்டு என விளக்கினேன். அது
முதல் அவருக்கு என்னைப் பிடித்துப் போய்விட்டது. நல்ல கிறிஸ்துவர்.
தலைமை
ஆசிரியரிடம் விவரங்களைச் சொல்லிவிட்டு
ஆசிரியர் அறைக்குச் சென்றேன். ஆசிரியர்கள் விசாரித்தலுக்குப் பதில் சொன்னேன்.
குறிப்பாக முஸ்லீம் ஆசிரியர்கள் ஐயப்ப விரதத்தைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டு,
அவர்களுடைய மெக்கா பயணத்தைப் போன்று கடினமானது என்றார்கள். தமிழ் மீடியத்திற்குச்
செல்லும் ஒரு இந்து ஆசிரியர், திடீரென்று ஐயப்பனைத் திட்ட ஆரம்பித்தார். அவரும்
நானும் நட்பாகத்தான் இருந்தோம். அவர் கடவுள் மறுப்பாளர் என்று அதுநாள்வரை தெரியாது.
தன் தோல் பையிலிருந்து சில காகிதங்களை எடுத்து
விநியோகம் செய்தார் அந்த திராவிட கழக அனுதாபி. எனக்கும் ஒன்று கொடுத்தார். அதில்
ஐயப்பனைக் குறித்து தாறுமாறாக எழுதியிருந்தது.
என்ன ஆச்சரியமான விஷயம் தெரியுமா? அதைப்
படித்துவிட்டு மற்ற ஆசிரியர்கள்
சும்மா இருந்த போது, முஸ்லீம் ஆசிரியர்கள் என்னை ஆதரித்துப் பேசி அந்த ஆசிரியரை
வாய் மூட வைத்தார்கள்! நான் பணியில் சேர்ந்த 1978 முதல் முஸ்லீம் மாணவர்களும்,
ஆசிரியர்களும் என் மேல் பாச மழை பொழிவார்கள். என் நண்பரான ஒரு தமிழ்-உருது நன்கு
தெரிந்த கணித ஆசிரியரிடம், ஆங்கில வார்த்தைகளுக்கான உருதுச் சொற்களைத்
தெரிந்துகொண்டு முஸ்லீம் வகுப்பில்
சொல்வேன். அதனால் மாணவர்கள் என்னை மிகவும் விரும்பினார்கள். அவர்கள் பண்டிகைகளின்
போது, எனக்கு அன்பளிப்பாக ‘போதும், போதும்’ என்றால்கூட விடாமல் இருபது ஸ்வீட் பாக்கெட்டுகளாவது
திணித்துவிடுவார்கள். வீட்டுக்கு மூன்று பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு, மற்ற
இந்து ஆசிரியகளிடம் மீதியைப் பகிர்ந்து கொடுத்துவிடுவேன். கடைத்தெருவில் அந்த
மாணவர்களின் கடைகள் இருக்கும். நான் விடுமுறை நாள்களில் காய்கறி மார்க்கெட்டுக்கு
சென்றால், என்னைப் பார்த்துவிட்டு அவர்கள் கடையில் தள்ளுபடி விலையில் பலசரக்குப்
பொருள்களைத் தர முயற்சிப்பார்கள். நான் அதை ஏற்காமல் முழுவிலை கொடுத்தே
வாங்குவேன்.
முஸ்லீம் வகுப்பிலும் அவர்கள் விரதத்தைப்
பற்றிக் கேட்டபோது நான் அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். அந்த வகுப்பு விநோதமாக
இருக்கும். மாணவர்களையும், மாணவிகளையும் ஆசிரியரின் மேடை வரை ஒரு ஸ்கிரீன்
தடுத்திருக்கும். செண்ட் வாசனை தூக்கலாக இருக்கும். இரு பாலரும் ஒருவரை ஒருவர்
பார்க்கக்கூடாது! மேடைமேல் ஆசிரியர்
உலாவியவாறு பாடம் நடத்த முடியாது. ஸ்க்ரீன் தடுப்புக்கு நேராக நின்றால்தான் மாணவிகளையும்,
மாணவர்களையும் பார்க்க முடியும்.
மாணவிகளிடம்
அவர்கள் நோட்டுகளைத் திருத்த முன்பு போல் கை நீட்டி வாங்காமல், விரதம் காரணமாக, அவர்களைப் பிரித்த
ஸ்க்ரீன் அருகில் வைத்துவிடச் சொல்லித் திருத்திக் கொடுப்பேன்.
அந்தப்
பள்ளியில் நான் ஆசிரியர் அறைக்குப் போவதையே மற்ற நாள்களில் தவிர்த்து, நூலகத்தைத்
தஞ்சம் அடைந்தேன். நூலகர் என் மேல் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர். அவர்
எனக்கு தனியாக ஒரு மேஜை, நாற்காலி கொடுத்து உதவினார். என் பீரியட் வகுப்புக்குப்
போய்விட்டு, மற்ற ஓய்வு நேரத்தில் அங்கு புத்தகங்களைப் படித்தேன். அருமையான
லைப்ரரி அது. வித விதமான புத்தகங்கள். ஓர் அரசுப்பள்ளியில் அப்படி காணமுடியாது.
ஒரு rack
ல் இராமலிங்க அடிகளார்
புத்தகத் திரட்டு வால்யூம், வால்யூமாக அடுக்கி வைத்திருந்தது. ஒவ்வொன்றும் கனமான
புத்தகங்கள். நான் விரதம் இருந்த அந்த 60 நாளில் பாதி வால்யூம்களைப் படித்து
முடித்திருப்பேன். அடடா! இராமலிங்க சுவாமிகள் எத்தனை பெரிய ஜீனியஸ்! பக்தி
முதற்கொண்டு மருத்துவம் வரையில் எவ்வளவு கட்டுரைகள், வியாக்கியானங்கள்! அவரைப்
பின்பற்றாமல் பகுத்தறிவு என்ற போர்வையில் தமிழ்நாடு யாரையோ பின்பற்றி, தடம்
புரண்டுவிட்டது!
மலம் எளிதாகக் கழிப்பது பற்றி கூட வள்ளலார்
கூறியிருக்கிறார். இடது கையால் இடது காதை மூடிக் கொண்டு, வலது கையால் இடது புற
வயிற்றை வலப்புறமாக இழுத்து அழுத்திப்
பிடித்துக் கொண்டு முயற்சி செய்தால் எளிதாகக் கழியும்! இன்று வரை அவர் சொன்னபடி கடைப்
பிடிக்கிறேன்! குறிப்புகள் எடுக்காமல் போய்விட்டேன். ஒரு புத்தகமே
எழுதியிருக்கலாம். படித்தது எல்லாம் மறந்து போய்விட்டது. சென்னை பூக்கடை பகுதிக்கு
நான் எப்போதாவது போனால், அங்கு இருக்கும் கந்த கோட்டத்துக்குத் தவறாமல் அவர் நினைவாகச்
சென்று அவர் கும்பிட்ட முருகனைத் தரிசிப்பதில் எனக்குள் ஒர் ஆனந்தம்
சூழ்ந்துகொள்ளும். (தொடரும்)
No comments:
Post a Comment