Friday, October 19, 2018

சபரிமலை சாஸ்தா தரிசனம் 2


                            2

‘தொலைச்சிடுவேன், தொலைச்சி! விரதம் சரியாக இல்லைன்னா தேங்காய்ல இருக்கிற நெய் ஐயப்பனுக்குப் போய் சேராது!’ என்றார் குருசாமி..
அவர் பஜனையில் பாடிய உருக்கத்தை கேட்டபோது ஐயப்பனே நேரில் வருவது போல் இருந்தது. 43 வது முறையாக போகப் போகிறார். அப்படிப் பட்டவருக்கு இப்படிப்பட்ட வீக்னெஸ், சிகரெட்டை விட முடியவில்லை!   விரதம் இருப்பது எதற்காக என்ற கேள்வி பஸ்ஸில் போகும் போது துளைத்துக் கொண்டிருந்தது. பத்து பேர் எதிரில் வந்தால் அதில் ஒருவர் கறுப்பு வேஷ்டியில் இருக்கிறார். அவ்வளவு தூரம் இந்த விரதம் எல்லோரையும் கவர்ந்திருக்கிறது. சாதாரண தொழிலாளர் முதல் சர்வ அதிகாரம் படைத்தவர்கள் வரை அத்தனை பேரும் சரியாகத்தான் விரதம்  இருக்கிறார்களா? குருசாமிகள் தக்க விரத அனுஷ்டானங்களை பற்றி வகுப்பு எடுத்திருக்கிறார்களா? இல்லை காம்பரமைஸ் முறையில் மாலை போடுதல் நடக்கிறதா..அவர்களுடைய நெய் ஐயப்பனுக்குப் போய் அபிஷேகம் செய்யப்படுமா? என்ற கேள்விகள் எனக்குள் எழுந்தன.
(இன்று(19/10/2018) விரதமிருந்து இருமுடி சுமக்கவேண்டிய தலையில் ஹெல்மெட் போட்ட இரண்டு மாற்றுமதப் பெண்கள் போலீஸ் காவலுடன் வீம்புக்காக ஏதோ ஹைகோர்ட் சட்டம் சொல்லிவிட்டதென்று வந்தவர்களை பக்தி இந்துக்கள் திருப்பி அனுப்பிவிட்டார்கள். கேரள இந்துக்களுக்கு ஒரு சபாஷ்.78% இந்துக்கள் உள்ள நாட்டில் ஒன்றுபட்டால் என்ன நடக்கும் என்பதற்கு இதுவே ஆரம்பம்)  

 சிறு வயதில் நவாப் ராஜமணிக்கம் அவர்கள் போடும் நாடகத்தைப் பார்த்திருக்கிறேன். அது முதல் ஐயப்ப விரதம் ஜனரங்கமாகிவிட்டிருக்கிறது. நடிகர் நம்பியார் அதை மேலும் பிரபலமாக்கிவிட்டார். என் தம்பி மலைக்கு மாலைபோடும் போது வீட்டின் தினசரி அஜெண்டாவே மாறிவிடும். அவன் போன குழுவில் அனைவரும் பிராமணர்கள். மிகவும் கட்டுப்பாடுகள், நிபந்தனைகள். எனக்கு அவை மிகவும் கடினம் என்று இந்த குருசாமியிடம் அழைத்து வந்தான். ஏனெனில் இவர்கள் குழுவிலும் அவன் மலைக்குப் போயிருக்கிறான்.
     ‘நம் வரைக்கும் ப்யூராக இருந்தால் சரி’ என்ற பிராமண சாமியின் குரல் என்னுள் எதிரொலித்தது. அவர் பத்தாவது முறையாக சபரிமலை போகிறார்.
        இரவு பதினொன்றரை மணிக்கு வேலூரை அடைந்து வீட்டுக் கதவைத் தட்டிய போது, மனைவி கதவைத் திறந்தாள். என்னைப் பார்த்ததும் இரண்டடி விலகி நின்றாள். தூங்காமல் இருந்த மூன்று வயதுக் குழந்தை என் கோலத்தைப் பார்த்து மிரண்ட மாதிரி இருந்தது. நாளை முஸ்லீம் அரசுப் பள்ளியில் எப்படி என்னைப் பார்ப்பார்களோ என்று எண்ணம் ஓடியது! ஏறக்குறைய மகர ஜோதிக்கு 62 நாள்கள் இருந்தன. விடாப்பிடியாக விரதத்தில் சொல்லியிருக்கிறபடி இருந்துவிடவேண்டும் என்ற வைராக்கியம் பிறந்தது. என் தேடலுக்கு நான் சமரசம் செய்துகொள்ளமுடியாது.


 , அந்த இரவில் குளித்துவிட்டு, துவைக்காமல் பையில் இருந்த கறுப்பு வேஷ்டி, ஜட்டி, டவலை நனைத்து, சமையலறையில் இருந்த கம்பியில் காயப்போட்டேன். அறையின் ஒரு மூலையில் வீட்டு ஓனரே விட்டுவிட்டுப் போன மர மண்டபம் ஒன்று இருந்தது. அதுதான் பூஜை அலமாரி. ஸ்வாமி படங்களை மனைவி வைத்திருந்தாள். எப்போதோ தம்பி கொடுத்த ஐயப்பன் படத்தை துடைத்து சுவாமி பூஜை அலமாரியில் வைத்துவிட்டு ‘சாமியே சரணம் ஐயப்பா!’ என்று சொல்லி ஹாலில் பாய் விரித்தேன்.
எத்தனை நாள் விரதம்? என்று கேட்டாள் மனைவி..
“ஜனவரி 14 மகர ஜோதிக்குப் போகவேண்டும். ‘62 நாள் ஆகும் என்றேன்.
“கடின விரதம்தான்! இரண்டு முறை மாத விலக்கு ஆகிவிடுவேன். என் அம்மாவை வரவழைக்கட்டுமா?”
“முதலில் சமாளிப்போம். அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்றேன்.
 இப்போது விரதம் என்னைப் பயமுறுத்தியது.
    அடுத்த நாள் 6 மணிக்கே எழுந்து குளித்துவிட்டு, காய்ந்தும் காயாமலும் இருந்த கறுப்பு வேஷ்டியைக் கட்டிக் கொண்டு, நெற்றியில் விபூதி பூசி, குருசாமி கொடுத்த புத்தகத்தில் இருந்த சரணங்கள் சொன்னேன்.. சந்தியாவந்தனம் செய்யும் பழக்கமில்லை, உபநயனம் ஆன இரண்டு வருடங்கள் செய்தேன். அதற்குப் பின் ஏனோ விட்டுவிட்டேன். குளித்துவிட்டு பக்தியுடன் சில ஸ்லோகங்கள் சொல்லி, கடவுள் படங்களைப் பார்த்து கன்னத்தில் இரண்டு தட்டு தட்டினால் என் தினசரி ப்ரேயர் முடிந்துவிடும். இன்று பூஜைக்கு நான் உட்கார்ந்ததை மனைவி சமையல் செய்து கொண்டே ரசித்தாள்.( அது 1979. சந்தியாவந்தனம் செய்யுங்கள் என்று அப்போதிலிருந்தே அவள் சொல்லிச் சொல்லி 2004 ல் பணியிலிருந்து ஓய்வுபெற்றது முதல் விடாமல் செய்கிறேன். 1981 ல் என் தகப்பனார் காலமான பின், வேலூரிலிருந்து திருப்பத்தூருக்கு மாற்றல் வாங்கி சொந்த வீட்டுக்கு போனபின், அம்மா சாளக்கிராமங்களை என் பங்குக்குப் பாகப்பிரிவினை செய்துகொடுத்துவிட்டாள். அப்போது முதல் நெற்றியில் கோபி சந்தனம் இட்டுக்கொள்வேன். யுகாதி, கிருஷ்ணாஷ்டமி, தீபாவளி என்ற லீவ் தினங்களில்தான் அவற்றிற்கு பூஜை செய்து , பாயசம் படைப்பேன். மற்றபடி சம்புடத்தில் அவை இருக்கும். இப்போது ஒவ்வொரு பவுர்ணமியிலும், மற்ற பண்டிகை நாள்களிலும் மத்வ பத்ததிபடிசாளக்கிராம பூஜை நடக்கிறது. )
.          சைக்கிளில் நான் பணியாற்றிய அரசு முஸ்லீம் மேனிலைப் பள்ளிக்குச் சென்று இறங்கி, தலைமை ஆசிரியருக்கு வணக்கம் செய்தேன். ரூமில் இருந்த அட்டெண்டன்ஸ் ரிஜஸ்தரில் நான் கையெழுத்து போட்டபோது என் கறுப்பு வேஷ்டி, விபூதி பார்த்துவிட்டு ‘யாரு சாய்ராமா?’ என்று வியந்த அவர் ஒரு கிறிஸ்துவர். 

‘மலைக்கா?’ என்றார்.  (தொடரும்)

No comments:

Post a Comment

Featured Post

என் சிறுகதை. ஜனவரி 1968 கலைமகள் பத்திரிகையில் வெளியானது

  அவரும் அவளும்                    கையில் ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு ஜங்க்‌ஷனுக்குக் கிளம்பினார் மாதவன். வழுக்கை விழுந்திருந்த அவருட...